விசைத்தறி, ஜவுளி உற்பத்தியைத் தொடங்க - தமிழக உற்பத்தியாளர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு : விசைத்தறி சம்மேளனத் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தைச் சேர்ந்த விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள், இலங்கையில் ஜவுளி உற்பத்தியைத் தொடங்க தேவையான வசதிகளைத் செய்து தருவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது, என தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் தலைவர் எம்எஸ் மதிவாணன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது:

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில், தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் தலைவர் எம்எஸ் மதிவாணன், செயலாளர் வித்யா சாகர், பள்ளிபாளையம் கருணாநிதி, சங்கரன்கோவில் டிஎஸ்ஏ சுப்பிரமணியம், ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கந்தவேல், மேச்சேரி நெசவாளர்கள் நல சங்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் சோமனூர், பல்லடம், கோவை, கருமத்தம்பட்டி, அவினாசி, பொதட்டூர்பேட்டை, அருப்புக் கோட்டை, குமாரபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள், தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஸ்வரனைச் சந்தித்து பேசினோம்.

அப்போது, இலங்கையில் உள்நாட்டு ஜவுளித் தேவையை பூர்த்தி செய்யவும், ஆயத்த ஆடைகளை தயார் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பவும் தொழிற்சாலைகளைத் தொடங்க தமிழக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இலங்கையில் ஜவுளி தொழிற்சாலை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு, அரசிடம் இருந்து மானியம் கிடைக்கும் என்றும், அங்கு வேலை செய்ய வருபவர்களுக்கு குடியிருப்பு விசா மற்றும் வரி இல்லாமல் இயந்திரங்கள் மற்றும் கச்சாப் பொருட்கள் இறக்குமதி, வருமான வரியிலிருந்து முழு விலக்கு ஆகியவை தரப்படும் என்றும் துணைத் தூதர் வெங்கடேஸ்வரன் உறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் யாழ்ப்பாணம், மாத்தளை போன்ற இடங்களில் புதிய விமான நிலையங்கள் வரப்போவதாகவும், மேலும் இரண்டு புதிய துறைமுகங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதால், போக்குவரத்துச் செலவு குறையும். எனவே, தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு தொழில் தொடங்குவது லாபகரமாக இருக்கும். கரோனா தடுப்பூசி வழங்குவதில் இந்தியா இலங்கைக்கு பெரும் உதவிகளைச் செய்துள்ளதாக தெரிவித்த துணைத்தூதர், அக்டோபர் முதல் இந்தியாவில் இருந்து இலங்கை வருவதற்கு தடைகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இலங்கை - தமிழக நெசவு மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்களை ஒன்றிணைக்கும் வகையில், 'தமிழ்நாடு லங்கா ஜவுளி மையம் ' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் நெசவாளர்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பல வசதிகளை ஏற்படுத்தித்தர தயாராக உள்ளதாக துணைத்தூதர் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழில் நலிந்து வரும் நிலையில், இலங்கை தூதரக அதிகாரியின் வாக்குறுதிகள் விசைத் தறியாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்