கிருஷ்ணகிரி அணையில் இருந்து 1600 கனஅடி தண்ணீர் திறப்பு : தரைப்பாலம் மூழ்கியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 1600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடிக்கு தண்ணீர் ஏற்கெனவே தேக்கி வைக்கப்பட்டிருந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து பாசன கால்வாய்களிலும், தென் பெண்ணை ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 913 கனஅடியாகவும், மதியம் 1400 கனஅடியாகவும், மாலை 1600 கனஅடியாகவும் அதி கரித்தது.

அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் விநாடிக்கு 177 கனஅடியும், 3 சிறிய மதகுகள் வழியாக 1423 கனஅடி என மொத்தம் 1600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

5 மாவட்ட மக்களுக்கு

அணை பூங்காவிற்கு செல்லும் பிரதான வழியில் உள்ள தரைப்பாலம் மூழ்கிய படி தண்ணீர் செல்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அணைக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அணை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறும் போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று (நேற்று) நீர் திறந்துவிடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அணையில் 50.95 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது என்றனர். மேலும், மாவட்டத்தில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி களில் பெய்த மழையால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகஉயர்ந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக இருந்தது. கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE