பி.எம் கேர்ஸ் நிதியில் அரசு மருத்துவமனைகளில் - ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் திறப்பு :

By செய்திப்பிரிவு

பி.எம் கேர்ஸ் நிதியில் திருச்சி, மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டிருந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நேற்று மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன.

பி.எம் கேர்ஸ் நிதியில் தமி ழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.

அந்தவகையில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலாளருமான க.மணிவாசன், ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் நேற்று பயன்பாட்டுக்கு இயக்கிவைத்தனர்.

பி.எம் கேர்ஸ் நிதியில் ரூ.1.25 கோடி, பொதுப்பணித் துறை சார்பில் கட்டமைப்பு மற்றும் மின்சார வசதிகளுக்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பி.எம் கேர்ஸ் நிதியில் நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டிருந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மருத்துவமனை தலைமை மருத்துவர் என்.விஜயகுமார், மக்களின் பயன்பாட்டுக்கு இயக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் நிலைய மருத்துவர் எம்.கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டிருந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மக்களின் பயன்பாட்டுக்காக தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இயக்கிவைத்தாா். நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதல்வர் கோ.ரவிக்குமார், மருத்துவமனை நிலை அலுவலர் செல்வம் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பி.எம் கேர்ஸ் நிதி ரூ.1 கோடியில் நிறுவப்பட்டிருந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மக்களின் பயன்பாட்டுக்கு இயக்கிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்