அரபு மன்னர் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி - அரண்மனையில் பணி வழங்குவதாகக் கூறி தஞ்சாவூர் பெண்ணிடம் ரூ.5.34 லட்சம் மோசடி :

By செய்திப்பிரிவு

அரபு நாட்டு மன்னரின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி, அரண்மனையில் பணி வழங்குவதாகக் கூறி தஞ்சாவூர் பெண்ணிடம் ரூ.5.34 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ரகேல் சுவர்ண சீலி(50). இவர், ஐக்கிய அரபு அமீரக பிரதமரும், துபை மன்னருமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கை நீண்டகாலமாகப் பின்தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், ரகேல் சுவர்ண சீலியின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தகவல் வந்தது. அதில், “நான் துபை மன்னரின் மகன் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம். எனது தந்தையின் ட்விட்டர் கணக்கை நீங்கள் நீண்ட நாட்களாகப் பின்பற்றி வருவதால், உங்களை எங்களின் அரண்மனையில் மன நல ஆலோசகர் பணியில் அமர்த்த உள்ளோம். இதற்கு ராயல் சிட்டிசன்ஷிப் சான்று பெற வேண்டும். அதற்காக, நீங்கள் 8 ஆயிரம் அமெரிக்க டாலர் அனுப்ப வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பிய ரகேல் சுவர்ண சீலி, அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்குக்கு 4.5.2018 அன்று ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 400 அனுப்பியுள்ளார். அதன் பிறகு நீண்ட காலமாகியும் எந்தவித பதிலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை ரகேல் சுவர்ண சீலி உணர்ந்தார். இதையடுத்து, கடந்த 5-ம் தேதி தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீஸில் ரகேல் சுவர்ண சீலி அளித்த புகாரின்பேரில், ஆய்வாளர் எஸ்.கார்த்திகேயன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ரகேல் சுவர்ண சீலி பின்பற்றிய ட்விட்டர் கணக்கு போலி என்பதும், அரபு இளவரசரின் பெயரைக் கூறி யாரோ மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்