தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 'பிஎம் கேர்' நிதி மூலம் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி கருவியை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார்.
‘பிஎம் கேர்' பிரதமர் நல நிதி திட்டத்தின் கீழ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் 35 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தலா ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை, நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கனிமொழி எம்பி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
தூத்துக்குடி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன்டி.நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், துணை கண்காணிப்பாளர் குமரன், துணை முதல்வர் கலைவாணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையபொறியாளர்கள் கலைச்செல்வன், பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கருவி வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுத்து 97 சதவீதம் சுத்தமாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இந்த கருவியில் இருந்து உற்பத்தியாகும் ஆக்சிஜனை நேரடியாக நோயாளிக்கு கொடுக்கவோ அல்லது சிலிண்டர்களில் நிரப்பி பயன்படுத்தவோ முடியும். இந்த கருவி நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டாகும்.
பெரிய நிதி செலவின்றி மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த கருவி மூலம் மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் உள்ள 200 படுக்கைகளின் ஆக்சிஜன் தேவையை முற்றிலுமாக பூர்த்தி செய்ய முடியும் என, டீன் நேரு தெரிவித்தார்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் குத்துவிளக்கேற்றினார்.
இதில், மருத்துவமனை கண்காணிப்பா ளர் மருத்துவர் கமலவாசன், உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி, வட்டாட்சியர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago