பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நேற்று தொடங்கப்பட்டது.
தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சியர் பா.முருகேஷ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால்பாபு, எம்பி அண்ணாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. சட்டப் பேரவை உறுப்பினர் ஜோதி தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர் ஏழுமலை, மருத்துவர் கார்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தி.மலை மற்றும் செய்யாறு என 2 இடங்களில் நிமிடத்துக்கு தலா ஆயிரம் லிட்டர் கொள்கலன்திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2 மருத்துவமனைகளிலும் தலா 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
ஆகாய மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடு ஆகிய வாயுக்களை உள்ளிழுத்து, ஆக்சிஜனை மட்டும் தனியாக பிரித்து, இதர வாயுக்களை வடிக்கட்டி, பின்னர் குழாய் மூலமாக ஆக்சிஜன் மட்டும் நோயாளி களுக்கு கிடைக்கும் வகையில் கொள்கலன் செயல்படும். 93 சதவீதம் தூய ஆக்சிஜன் கிடைக்கும். நோயாளிகளுக்கு தடை இல்லாமல் ஆக்சிஜன் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago