பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணன் நேற்று பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மின் கோட்ட செயற் பொறியாளர் கிருஷ்ணன் தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மின்சாரத்துறை அமைச்சர் என பலரிடம் புகார் மனு அளித்தனர்.
விசாரணை கமிட்டி
இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணன் மீது உரிய விசாரணை நடத்த தனியாக ‘விசாரணை கமிட்டி’ அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிட்டி கடந்த 5-ம் தேதி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான செயற்பொறியாளர் கிருஷ்ணன் மற்றும் புகார் மனு அளித்த 5 பெண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.அப்போது, அதே அலுவலகத் தில் பணியாற்றி வரும் மேலும் 9 பெண்கள் செயற்பொறியாளர் கிருஷ்ணன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து விசாரணை கமிட்டியிடம் புகார் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, வேலூர் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கிருஷ்ணனிடம் நேற்று காலை முதல் மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாவதற்கு முன்பாகவே திருப்பத்தூர் மின்கோட்ட செயற் பொறியாளர் கிருஷ்ணனை வெலக்கல்நத்தம் மின்கோட்ட அலுவலகத்தின் செயற் பொறியாளராக பணியிடம் மாற்றம் செய்து நேற்று மாலை திடீரென உத்தரவு வெளியானது.
இதையறிந்த திருப்பத்தூர் மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆவேச மடைந்து சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
கைது செய்ய வேண்டும்
அதில், பாலியல் குற்றச் சாட்டுக்கு ஆளான செயற் பொறியாளர் கிருஷ்ணன் மீது உரிய விசாரணை நடத்தி அவரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் பதிவிட்டு வருகின்றனர்.இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கடந்த 5-ம் தேதி திருப்பத்தூரில் விசாரணை கமிட்டி கிருஷ்ணனிடம் என்ன விசாரணை நடத்தினார்கள் என தெரியவில்லை. வேலூரில் நடந்த விசாரணையின் முழு விவரம் தெரியவில்லை. மாறாக செயற் பொறியாளர் கிருஷ்ணன் திருப்பத்தூரில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவுள்ள வெலக்கல் நத்தம் மின்வாரிய அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றவே மின்சார வாரிய அதிகாரிகள் அக்கறை காட்டி வருகின்றனர்.
ஆட்சியரிடம் புகாரளிக்க முடிவு
எனவே, இது குறித்து முறையான விசாரணை நடத்தி அவர் மீது நியாயமான நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.இது தொடர்பாக திருப்பத்தூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வேல்முருகனிடம் கருத்து கேட்க அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago