பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், பொது சுகாதார பணியில் ஆயிரத்து 700 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இதில் 1200 பேர், பணி நிரந்தரம் இல்லாமல், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரப் பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் கொடுக்கக் கூடாதுஎன்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப்பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சியில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீடுகள், கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அளவுக்கு, தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தற்போது பணியில் உள்ளவர்கள் கடும் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே காலியான பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும்.
ஈரோடு மாநகராட்சியில் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள்,ஓட்டுநர்கள் என அனைத்து பிரிவுகளிலும் 480 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குப்பைகளை சேகரித்தல், தெருக்கள், சாக்கடைகள் சுத்தம் செய்தல், குப்பை கிடங்குகளில் அரவை இயந்திரங்களில் வேலை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் அனைவருக்கும் தினக்கூலியாக ரூ. 676 கொடுக்க வேண்டும். தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.17 சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago