இடி, மின்னலின்போது - மரத்தடி, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் நிற்கக் கூடாது : பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுரை

இடி, மின்னலின்போது மரத்தடி, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் நிற்கக் கூடாது என பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

பருவமழைக்காலம் தொடங்கும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சாரக் கம்பி அருகேசெல்லாமல், அதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்வாரிய மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்துக்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

மின்சார தீ விபத்துக்களுக்குண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின் சாதனங்களில் தீ விபத்து ஏற்படும் போது பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மணல், கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் இல்லாமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையலாம். இடி அல்லதுமின்னலின் போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக்கூடாது. அதேபோல், திறந்த நிலையில் உள்ள ஜன்னல் கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.

மழைக் காலங்களில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ மின் கம்பி அறுந்து விழுந்தாலோ மற்றும் மின் வாரியம் தொடர்பான தகவலுக்கு 0424-1912, 0424-2260066, 0424-2240896, 9445851912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தமிழக அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மின்னகம்” என்ற மின் நுகர்வோருக்கான 94987 94987 சேவை எண்ணில் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE