ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குச்சாவடிக்கு - 13 வகையான கரோனா தடுப்பு உபகரணம் வழங்க நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு 13 வகையான கரோனா தடுப்பு உபகரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள் உள்ளிட்ட மொத்தம் 35 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, மீதமுள்ள 24 பதவிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மொத்தம் 91 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு வரும் 9-ம் தேதிநடைபெறவுள்ள நிலையில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 119 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்காக, 195வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றுப் பரவல் நீடித்து வரும் நிலையில், வாக்குச் சாவடிகளில் தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, வாக்குச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிவோருக்கு முகக்கவசம், கையுறை, முகக்கவச தடுப்பு, கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி, வாக்காளர்களை பரிசோதிக்க, உடல்வெப்ப நிலைக் கருவி உள்ளிட்ட மொத்தம் 13 வகையான பொருட்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

இவை, சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தேவையான எண்ணிக்கை அளவுக்கு தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு வருகிறது. இப்பொருட்கள் அனைத்தும் தேர்தல்நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. பின்னர், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 8-ம் தேதி வாக்குச் சாவடிக்கான வாக்காளர்கள் பட்டியல், வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்டவற்றுடன், கரோனா தடுப்பு உபகரணங்களும் அனுப்பி வைக்கப்படும்.

இதனிடையே, வாக்குப்பதிவு முடிவுற்றதும் வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கவும், வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கும் 12 ஊராட்சி ஒன்றியங்களில், 12 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்