செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு தாராளமாக பரிசுகள் வழங்கப்பட்டன. தேர்தல் பறக்கும் படையினர், தங்களின் சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கோரியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று புனித தோமையர் மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், சித்தாமூர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக அக். 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் தேர்தலையொட்டி, பரிசு பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் 24 மணி நேரமும் வாகன சோதனை மேற்கொள்கின்றனர். இந்த குழுவினர் இதுவரை பணம், பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 435 மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர்.
தங்க மூக்குத்தி, புடவை
ஆனால் மாவட்டத்தில் பெரிய அளவில்தேர்தல் பரிசு பொருட்கள், பணத்தைபறிமுதல் செய்யவில்லை சட்டப்பேரவை மற்றும் எம்பி தேர்தல்களில் கண்காணிப்பது போன்று பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையை சரிவர மேற்கொள்ளவில்லை என சுயேச்சை வேட்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற ஒன்றியங்களில் வாக்காளர்களுக்கு சில்வர் பாத்திரம், பணம், தங்க மூக்குத்தி, அரிசி, மாளிகை பொருட்கள், புடவை என பரிசுப் பொருட்களை தங்குதடையின்றி வேட்பாளர்கள் வழங்கினர். உள்ளாட்சித் தேர்தல் என்பதால், கிராமங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் பங்குக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர். இதனால், பரிசுப்பொருட்கள் குறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தற்போது இரண்டாம் கட்ட தேர்தல், வரும்9-ம் தேதி நடைபெறும் கிராமங்களில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டியுள்ளனர். இதனால், தேர்தல் பறக்கும் படையினர், தங்களின் சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago