கடலூர் மாவட்டத்தில் - நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் : வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரை

By செய்திப்பிரிவு

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திரரெட்டி தலைமையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தது:

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் மற்றும்கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.பணிகளை ஒருவாரகாலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள், மிக தாழ்வான பகுதிகள் என 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள வட்டார அளவிலான 14 மண்டல அலுவலர்கள் மற்றும் நகராட்சி அளவிலான 5 மண்டல அலுவலர்கள் நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் மண்டல அலுவலர்கள் புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடம் மற்றும் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட வேண்டிய இடங்களில் குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக் கவேண்டும் என்றார்.

பின்னர் கடலூர் பேரிடர் கால வானொலி 107.8 பண்பலை அலைவரிசையில் கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் உரையாற்றியது:

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தினால் பேரிடர் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில்பேரிடர் சம்பந்தமான தகவலை04142-221113,233933, 221383ஆகிய தொலைபேசி எண்களில்தொடர்பு கொள்ளலாம். இதுதவிர கட்டணமில்லா தொலைபேசிஎண்ணான 1077-ல் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் பேரிடர் காலங்களில் அரசு சொல்லக்கூடிய அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். எஸ்பி சக்திகணேசன்,கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்