சிவகங்கை அருகே சாலையில் விழுந்த மரத்தில் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார். அவ்வழியாக காரில் சென்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.
சிவகங்கை பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சிவகங்கை அருகே ஒக்கூர் குளக்கட்டப்பட்டியில் நாட்டரசன்கோட்டை சாலையின் குறுக்கே நாட்டுவேல மரம் சாய்ந்து கிடந்தது.
இந்நிலையில் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஊருக்குச் சென்ற மதுரை மாவட்டம், மேலூர் அருகே கூலிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி திருப்பதி (48) எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அப்போது காளையார்கோவில் சென்றுவிட்டு அவ்வழியாக திருப்பத்தூர் சென்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததை பார்த்ததும் காரை நிறுத்தினார். அமைச்சர், அவருடன் வந்தவர்கள் மற்றும் போலீஸார் மரத்தை அகற்ற முற்பட்டபோது, அங்கு ஒருவர் இறந்து கிடந்ததைப் பார்த்தனர். ஆனால், அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத் தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அகற்றி திருப்பதியின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூலித்தொழிலாளி இறப்பு குறித்து சிவகங்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago