அரசு மருத்துவமனை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு - அந்தியூரில் மருத்துவர், செவிலியர் போராட்டம் :

அந்தியூர் அரசு மருத்துவமனை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டதைக் கண்டித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவு 10 மணியளவில், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். ஆனால், இந்த தகவலை சிலர் சமூக வலைத்தளங்களில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் தவறுகள்நடப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டதாகவும் செய்தி வெளியானது.

அரசு மருத்துவமனை குறித்துசமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகளை வெளியிட்டவர்கள் மீது, சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) கவிதா தலைமையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் போலீஸார் அங்கு வந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதை ஏற்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE