இரும்பு விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு, குறு தொழில் முனைவோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் ஆம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்க மாநில இணைச் செயலாளரும், வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்க தலைவருமான எம்.வி.சுவாமிநாதன் தலைமை வகித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட சங்கத்தலைவர் சந்திரஹாசன் வரவேற்றார். செயலாளர் புனித வேல், இணைச்செயலாளர் சண்முகநாதன், ஒருங்கிணைப் பாளர் முரளி, வேலூர் மாவட்ட சங்கச்செயலாளர் ஹரிஹரன், துணைத்தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
தொழிற்சாலைகளுக்கு தேவை யான முக்கிய மூலப்பொருளாக கருதப்படும் இரும்பு விலை தற்போது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், மத்திய அரசு அறிவிப்பின்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் இரும்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இரும்பின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இரும்பு விலையை மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் பயன் படுத்தும் வெல்டிங் இயந்திரம் பயன்பாட்டுக்காக தனியாக மின் இணைப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையும் அதற்காக 15 சதவீத கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் விதிமுறையும் தமிழ்நாடு மின்சார வாரியம் தளர்த்தி அதற்கான ஆணையை திரும்பப்பெற வேண்டும்.
சட்டப்பூர்வமாக உரிமங்களான இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பெரு நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலிருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
ஏற்கெனவே கரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு நடைமுறை மூலதனம் இல்லாமல் தவித்து வரும் தொழில் முனைவோருக்கு மத்திய அரசு உத்தரவின் பேரில் வங்கிகள் கரோனா அவசர கால நடைமுறை மூலதனக்கடன்கள் வழங்கின. தற்போது, அந்த நடைமுறை மூலதனம் கடனுக்காக வட்டி மற்றும் மாத தவணை வங்கிகளால் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அதனை 2022-ம் ஆண்டு மார்ச் முதல் தள்ளி வைத்து ஏப்ரல் மாதம் முதல் பிடித்தம் செய்ய உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேரு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டுள்ளன. முடிவில், திருப்பத்தூர் மாவட்ட சங்கத்தலைவர் மனோ கரன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago