தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த சித்தாலப்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் விவசாயி ரவிச்சந்திரன் (50). இவரது உடல், அதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தின் அருகே பாழடைந்த கிணற்றின் உள்ளே இருந்த முட்புதரில் இருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
ரவிச்சந்தரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பயிர்களை காப்பாற்ற விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையில், விவசாய நிலங்களை ஆய்வு செய்தபோது, சிலரது விவசாய நிலத்தில் உள்ள மின்வேலியில் மாற்றம் இல்லாமல் இருக்கும் போது, அதே கிராமத்தைச் சேர்ந்த துளசி என்பவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் இருந்து மின் வயர்கள் அகற்றப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, துளசியிடம் நடத்திய விசாரணையில், அவரது விவசாய நிலத்தில் நிலக் கடலையை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ரவிச்சந்திரன் கடந்த மாதம் 30-ம் தேதி உயிரிழந்துள்ளதும், அதனை மறைக்க கிணற்றில் அவரது உடலை வீசியதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து துளசியை(29) காவல்துறையினர் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago