சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி, உரிய மரியாதையை தமிழக அரசு செய்து வருவதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 118-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூர் குமரன் நினைவாக அவரது திருவுருவத்துடன் கூடிய அஞ்சல் வில்லையை 2007-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டு சிறப்பித்தது. உடுமலை அருகே தளியில் சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு, ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் உருவச் சிலை அமைக்க உள்ளது. கீழ் பவானி பாசனம் உருவாக காரணமாக இருந்தவரும், சுதந்திர போராட்டத்தின்போது 11 ஆண்டுகள் சிறையில் இருந்தவருமான ஈஸ்வரனுக்கு அரங்கம் மற்றும் உருவச் சிலை அமைக்கப்படுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திர வீரர்களுக்கு, மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி, உரிய மரியாதையை தமிழக அரசு செய்து வருகிறது.
சுதந்திர போராட்டத்தின்போது ஆங்கிலேயர்களால் திருப்பூர் குமரன் தாக்கப்பட்ட பகுதியில், நிழல்குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago