பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 477 கனஅடி நீர்வரத்து இருந்தது. மாலையில் இது 2437 கனஅடியாகக் குறைந்தாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பவானிசாகர் அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இம்மாத இறுதி வரை அணையில் 102 அடிவரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும். இதனால், கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் 102 அடியைத் தொட்டபோது பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நேற்று மாலை 101.87 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக 2,300 கனஅடி என மொத்தம் 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியைத் தொட்டதும் பவானி ஆற்றில் உபரி நீர் எந்த நேரத்திலும் வெளியேற்றப்படும் என்பதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று தாளவாடி ,பவானி சாகர், சென்னிமலை பகுதிகளில் லேசான மழை பெய்தது. தாளவாடியில் 4, பவானிசாகர் 1.8, சென்னிமலை 1 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்