இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பாஜக : மார்க்சிஸ்ட் கே. பாலகிருஷ்ணன் கருத்து

‘‘கார்ப்பரேட்-மதவாதம் ஆகிய இரட்டைக் குதிரைகளில் பாஜக பயணிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.

சிவகங்கையில் நேற்று முன்தினம் இரவு நடந்த விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்கள் என்ற கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன்கார்டு என்ற ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி ஆர்எஸ்எஸ் - பாஜக செல்கிறது. பொதுத்துறை பங்குகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்று நாட்டை மீண்டும் அடிமைத்தனத்துக்குள் சிக்க வைக்கின்றனர். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.

கார்ப்பரேட்-மதவாதம் என்ற இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறது பாஜக. ஆனால் ஆபத்தை உணராமல், அதிமுக அவர்களோடு கரம் கோர்த்துள்ளது. மொழி திணிப்பு மூலம் நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை சிதைக்கிறது பாஜக. சமஸ்கிருதம், இந்தியைத் திணித்தால் தமிழ்மொழி காணாமல் போகும்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் ஓராண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் சீமான் நூறு நாள் வேலையை ஒழிக்க வேண்டும் என்கிறார். சீமான் கார்ப்பரேட்டுகளின் ‘கையாளாக’ மாறி விட்டார்.

கடந்த ஏழாண்டுகளில் ரூ.10.75 லட்சம் கோடி கடனை பெருமுதலாளிகளுக்கு மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், உழைப்பாளிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை.

இந்தியாவில் 52 சதவீதம் குழந்தைகள், 62 சதவீதம் பெண்கள் ரத்தச் சோகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. மதம், சாதி பெயரால் மக்களைத் துண்டாடி தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இதில் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி உள்ளிட்டோர் பேசினர்.

சிவகங்கை மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE