குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 309 மனுக்களை பெற்ற ஆட்சியர், தகுதியான மனுக்கள் மீது அடுத்த 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத மனுக்கள் தொடர்ந்து வரும்பட்சத்தில், அந்த மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை தொடர்புடைய துறை அலுவலர்கள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பாக்கிய லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொடர்ந்து மனு அளித்து தீர்வு கிடைக்காத மனுதாரர்கள் சிலர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயற்சிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நிலம், வீடு அபகரிப்பு, சீட்டு மோசடி உள்ளிட்டவையால் பாதிக்கப்படும் நபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்கின்றனர். இதனை தடுக்கவும், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தீக்குளிக்க முயற்சி செய்பவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago