கிருஷ்ணகிரியில் சிறுத்தை நடமாட்டமா? : ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவிய நிலையில், உண்மையில்லாத தகவலை பகிர வேண்டாம் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரினகாப்பாளர் எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள கூசுமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். மேலும், கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும் சிறுத்தை நடமாட்டம் தொடர்பான தகவல் எதுவும் தெரியவரவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வாட்ஸ்அப் குழுக்களில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக தகவல் பரவியது.

‘கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆயுதப்படைக்கு செல்லும் வழியில் தேர்தல் அலுவலக கட்டிடத்தை ஒட்டிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், ஆடுகள், நாய்களை சிறுத்தை வேட்டையாடி உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு குறிப்பாக இரவு நேரங்களில் செல்ல வேண்டாம்’ என வாட்ஸ்-அப்பில்தகவல் வெளியாகி இருந்தது. மேலும்,கண்காணிப்புக் கேமராவில் பதிவான படம் என சிறுத்தையின் படமும் பதிவிடப்பட்டிருந்தது.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாடியதாக வனத்துறையினர் தேடி வரும் நிலையில் இந்த வாட்ஸ்அப் தகவல் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறியதாவது:

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அருகே சிறுத்தை நடமாடியதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் கால் தடங்களை ஆய்வு செய்தோம். அதில், நாய்களின் கால் தடங்கள் மட்டுமே தெரிய வந்துள்ளது. சிறுத்தையை நேரில் பார்த்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கூசுமலை, மேலுமலை, சிக்காரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

உண்மை அல்லாத வாட்ஸ்-அப் தகவல்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து பொதுமக்களை அச்சம் அடைய வைக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்