உரம் வாங்கும் விவசாயிகளிடம் இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் நடவடிக்கை : விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

உர விற்பனை நிலையங்கள், யூரியா உரத்துடன், வேறு இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1200 மெட்ரிக் டன் இந்திய பொட்டாஷ் நிறுவன யூரியா உரம், மங்களூரு துறைமுகத்தில் இருந்து, ரயில் மூலம் ஈரோடு வந்தது. இதனைப் பார்வையிட்ட மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகள், மேட்டூர் வலதுகரை வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், கரும்பு, வாழை மற்றும் இதர பயிர்களுக்கு யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது.

மாவட்டத்தின் உர தேவைக்கேற்ப, அரசு வழிகாட்டுதலின்படி, உர நிறுவனங்களிடமிருந்து உரங்களை பெற்று, தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக , விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், கடந்த மாதம் 30-ம் தேதி 737 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய பொட்டாஷ் நிறுவனம் மூலம் 1200 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயில் மூலம் ஈரோடு வந்துள்ளது.

உர விற்பனை நிலையங்கள், யூரியா உரத்துடன் வேறு எவ்வித இடுபொருட்ளையும் விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. மீறினால் உரக்கட்டுப்பாட்டுச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE