``லட்சக்கணக்கான ஓலைச் சுவடிகள் நெல்லையில் பதிப்பிக்கப்படாமல் உள்ளன” என்று, பாளையங்கோட்டையில் நடைபெற்ற `அர்சிய சிஷ்ட ஞானப்பிரகாசியார் சரித்திரம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது.
கிறிஸ்தவப் புனிதர் அர்சிய சிஷ்ட ஞானப்பிரகாசியார் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரது சரித்திரம் ஓலைச்சுவடியாக இருந்தது. இதனை, பேராசிரியர் கட்டளை கைலாசம் நூலாக பதிப்பித்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா, `மேலும்’ இலக்கிய அமைப்பின் சார்பில், பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. `மேலும்’ சிவசு தலைமை உரையாற்றினார். தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை வீ.ஹென்றி ஜெரோம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சென்னை தியான ஆஸ்ரமத்தின் அருட்தந்தை ஆனந்த அமலதாஸ் பேசியதாவது:
சைவத்துக்கும், கிறிஸ்தவத்துக் கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழின் முதல் நூலான `தம்பிரான் வணக்கம்’ எனும் நூல் பெயரே, `தாமே பிரான்’ எனும் மாணிக்கவாசகரின் சொல்லாட்சி. ராபர்ட் டி நொபிலி எனும் தத்துவப் போதகர் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் சிறந்து விளங்கியவர். சைவ சமய நூலான சிவஞானசித்தியாரை, இவர் லத்தீனில் மொழிபெயர்த் தார். சைவ சித்தாந்தம் அவரைப் பெரிதும் ஈர்த்தது. இத்தாலி நாட்டு துறவி வீரமாமுனிவர் தமிழ்ப்பண்பாட்டில் தோய்ந்தவர். தமிழின் முதல் உரைநடை நூலான `பரமார்த்த குரு கதை’யைத் தமிழுக்குக் கொண்டுவந்தார். சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையம் அருகில் உள்ள அசலாத்தம்மன் திருத்தலத்தில் வீரமாமுனிவர் திருவுருவம் சித்தர் வடிவில் இன்னும் உள்ளது. இத்தாலி நாட்டு புனிதர் ஞானப்பிரகாசியார் பற்றிய சரித்திரம் ஓலைச்சுவடியாக இருந்தது. அதனை, நூலாக பேராசிரியர் கட்டளை கைலாசம் பதிப்பித்துள்ளார். இவ்வாறு சைவமும், கிறிஸ்தவமும் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
இவ்வாறு அவர் பேசினார்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சவுந்தர மகாதேவன் பேசியதாவது:
திருநெல்வேலியில் இன்னும் பல வீடுகளில் அரிய ஓலைச் சுவடிகள் உள்ளன. தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சா திருநெல் வேலியில் ஒன்றரை ஆண்டுகள் தங்கி அரிய சங்க இலக்கிய சுவடுகளைத் தேடிக் கண்டறிந்தார். 1600-ல் தமிழ்நாட்டுக்கு வந்த கிறித்தவ அருளாளர்கள் தமிழ்ப் பண்பாட்டைப் பதிவு செய்தனர். `ஞானப்பிரகாசியார் சரித்திரம்’ என்கிற அரிய சுவடி அச்சுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர் கட்டளை கைலாசம் பேசும்போது, ``இன்னும் லட்சக்கணக்கான தமிழ்ச் சுவடிகள் நெல்லையில் உள்ளன. ஏன் நாம் தேடவில்லை? ஐரோப்பியர்கள் 1600 களில் வந்தபோது கவிராயர்கள் நிகண்டுகளைப் பாதுகாத்தனர். இன்னும் அரிய ஓலைச் சுவடிகள் பல உள்ளன. அவற்றை நாம் பதிப்பிக்க வேண்டும். இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட ஓலைச் சுவடிகளையும் நாம் பதிப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
குரு. சண்முகநாதன், எழுத்தாளர் நாறும்பூநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago