திமுக ஆட்சி பாராட்டும் வகையில் உள்ளது - தமிழகத்தில் மேஜிக் செய்தாலும் பாஜக காலூன்ற முடியாது : ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

By செய்திப்பிரிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு, மாநில அரசு பணிகளில், பொதுத்துறை நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம் கூறியுள்ள அடிப்படை உரிமை.

தமிழகத்தில் 1952-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று தீர்ப்பளித்தது. கடும் போராட்டத்தைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தமே கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு பிறப்பால் ஏற்படுத்தப்பட்ட அநீதியின் காரணமாகவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கட்டாயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

திமுக மேஜிக் அரசியல் செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். உண்மையில் இந்தியாவில் மேஜிக் செய்து அரசியல் செய்கிறவர்கள் பாஜகவினர்தான். கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. புதுச்சேரியில் ஆளுநரை வைத்து ஆட்சியை கலைத்தார்கள்.

ஜாதி, மத வெறியை ஏற்படுத்தி மேஜிக் செய்து ஆட்சியைப் பிடிப்பது பாஜக மட்டுமே. எந்த மேஜிக் செய்தாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு துறைகளில் மக்கள் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. திமுக ஆட்சி பாராட்டும் வகையில் உள்ளது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்