கல்லணைக் கால்வாயில் மூழ்கி 3 நாட்களில் 5 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் கல்லணைக் கால்வாய் ஆற்றில் கடந்த 3 நாட்களில் 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவைச் சேர்ந்தவர் ஷேக்மைதீன் மகள் ஆயிஷாபேகம்(15).

அப்பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 1-ம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தஞ்சாவூர் ஆற்றுப் பாலத்துக்குச் சென்று கல்லணைக் கால்வாயில் குதித்தார். இதை ஆற்றின் தென்கரை பகுதியில் நின்று பார்த்த பூதலூரைச் சேர்ந்த முகிலன்(30) என்பவரும் ஆற்றில் குதித்து, ஆயிஷா பேகத்தை காப்பாற்ற முயன்றார். இதில், 2 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, நத்தமாடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் ஆயிஷா பேகத்தின் சடலமும், கண்டிதம்பட்டு கீழ்குமிழி அருகே நேற்று முகிலனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டன. ஆயிஷா பேகத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.சரவணன்(33) நேற்று முன்தினம் மானோஜிப்பட்டி பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆற்றில் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கினார். சில மணிநேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

தஞ்சாவூர் பாலாஜி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் விக்னேஸ்வரன்(22), வல்லம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்துவந்தார். இவர் நேற்று முன்தினம் மானோஜிபட்டியில் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கினார். பின்னர், நேற்று காலை அவர் அப்பகுதியிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

தஞ்சாவூர் சாமந்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்.ரமேஷ், டீ கடை தொழிலாளி. இவர் புதுப்பட்டினம் கல்லணைக் கால்வாயில் நேற்று குளித்துக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கினார். தகவலின்பேரில் அங்கு வந்து ஆற்றில் இறங்கி தேடிய தீயணைப்புத் துறையினர், ரமேஷை சடலமாக மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்