தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அகரப்பேட்டையைச் சேர்ந்தவர் துரைக்கண்ணன்(50), அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர். இவரது மனைவி பழனியம்மாள், மகன்கள் அருண்குமார், பிரேம்குமார்(22), மகள் ஹேமா.
இவர்களில், பிரேம்குமார் திருச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் தொழில்பழகுநராக வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில், அகரப்பேட்டையில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை இடி, மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை வீட்டு வாசலில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டு எழுந்த துரைக்கண்ணன் கதவை திறந்து வெளியே வந்தார்.
அப்போது, வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்ததால், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால், அவர் அலறிய சப்தம் கேட்டு, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிரேம்குமார் வெளியே வந்து, தனது தந்தையைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், துரைக்கண்ணன், பிரேம்குமார் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தோகூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
14 ஆடுகள் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா தெருவைச் சேர்ந்த சேகர் மனைவி ஆறுமுகவள்ளியின் 14 ஆடுகள் நேற்று முன்தினம் மொட்டமலை அடிவாரத்தில் மேய்ந்தபோது மின்னல் பாய்ந்து உயிரிழந்தன. தகவலறிந்த பெரம்பலூர் வட்டாட்சியர் சின்னதுரை அங்கு சென்று விசாரணை நடத்தினார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago