திருப்பூர் மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் - சாலையைவிட 3 அடி உயரமாக கட்டப்படும் சாக்கடை கால்வாய் : மழைக்காலங்களில் குளம்போல தண்ணீர் தேங்கும் என குற்றச்சாட்டு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வளர்மதி பேருந்து நிறுத்தம் தொடங்கி, வளம்பாலம் செல்லும் கஜலெட்சுமி திரையரங்க சாலையில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் சாக்கடைப் பணியால், அப்பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது ‘‘திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லாமல் தாராபுரம், காங்கயம் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பிரதானமாக கஜலெட்சுமி திரையரங்க சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சிறிய அளவில் மழை பெய்தாலே, சாலையில் தண்ணீர் தேங்கும். இங்கு தற்போது கட்டப்பட்டு வரும் சாக்கடையால், சாலை 3 அடி பள்ளமாக மாறிவிட்டது. இதனால் மழைக் காலங்களில் குளம்போல தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை உயரமாக உள்ளதால், வீடு மற்றும் கடைகளுக்குள் செல்ல மண்ணைக்கொட்டி பயன்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது ‘‘சாலைகள் அமைக்கும்போது மேல்தள கட்டுமானத்தை சுரண்டிவிட்டு, அதே அளவுக்கு மேல்தளம் அமைக்க வேண்டும். இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது தடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் வெ. இறையன்பு அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், அதற்கு மாறாக திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் சாலைப்பணிகள் நடந்து வருகின்றன. சாலைக்கும், புதிதாக கட்டப்பட்டு வரும் சாக்கடைக்கும் 3 அடி உயரம் வருமென்றால், அந்தளவுக்கு எப்படி சாலை அமைத்து செப்பனிட முடியும். இது, சாத்தியமில்லாத ஒன்று,’’ என்றார்.

திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியம் கூறும்போது ‘‘கஜலெட்சுமி திரையரங்கப் பகுதியில், சிறு மழை பெய்தாலே, அங்கு தண்ணீர் தேங்கும். தற்போது சாக்கடையின் உயரத்தை உயர்த்தி உள்ளோம். அதே அளவுக்கு சாலையை உயர்த்திவிடுவோம். நொய்யல் நதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் சாக்கடை கட்டப்பட்டுள்ளது. இதேபோல ஈஸ்வரன் கோயில் பாலமும் எதிர்காலத்தில் கட்டுவதற்கு அரசுக்கு நிதி கோரி திட்ட முன்மொழிவு அனுப்ப உள்ளோம். ஆகவே, ஈஸ்வரன் கோயில் பாலமும் உயர்த்திக் கட்டும்போது, அனைத்து பகுதியும் சீராகிவிடும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்