பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்ததைத் தொடர்ந்து பூமலைக்குண்டுவைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளும் ராஜினாமா செய்வதாக கிராமசபைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
தேனி ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட பூமலைக்குண்டில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தங்களுக்குள் ஒருமனதாக முடிவு செய்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் 5 வார்டுகளின் உறுப்பினர் பதவிகளுக்கு நபர்களை நிறுத்தினர். இதனால் தலைவராக பிரியா, துணைத் தலைவராக மகேஷ் மற்றும்வார்டு உறுப்பி னர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் கோயிலுக்கு அருகில் உள்ள கிராம நிலத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என்று கிராம மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. நேற்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அரசு தரப்பில் தேனி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஞான திருப்பதி, ஊராட்சி எழுத்தர் செந்தில்ஆண்டவர் ஆகியோர் பங்கேற்றனர்.
ஊராட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ஊராட்சி பிரதிநிதிகள் ராஜினாமா குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago