கரோனாவால் உயிரிழந்த சுகாதாரத் துறையினரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கரோனாவால் உயிரிழந்த சுகாதாரத் துறையினரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் 33-வது மாநில செயற் குழு கூட்டம் மாநிலத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பு செயலாளர் அருளீஸ்வரன், பொருளாளர் ரங்கநாதன், துணைத் தலைவர்கள் முத்துராஜ், ராமா, இணை செயலாளர்கள் ரமேஷ், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு பின்னர் மாநிலத் தலைவர் சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற் படிப்பு மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை பட்டமேற்படிப்பு மருத்துவ இடங்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட அரசாணையை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கூட்டம் முறையாக நடைபெறவில்லை. இனிவரும் காலங்களில் வெளிப்படைத் தன்மையுடனும் முறையாக பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்.

சுகாதாரத் துறையினருக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். கரோனா காலத்தில் இறந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.

உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களுக்கு இணைப் பேராசிரியர் பதவிகளை அதிகப்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்