கிருஷ்ணகிரி, தருமபுரியில் விடுமுறை வழங்காத 91 நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் காந்திஜெயந்தியன்று விடுமுறை வழங்காத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு விடு முறை சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும்.

காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று சட்ட விதிகளின் கீழ் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) தலைமையில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 66 கடைகள், 56 உணவு நிறுவனங்கள் மற்றும் 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 128 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 40 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 51 உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட 91 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE