திருச்சி அண்ணா சிலையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம், மரக்கடை வழியாக ஜங்ஷன் வரை புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.2.65 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து ஒத்தக்கடை வழியாக நீதிமன்ற ரவுண்டானா வரையும், சிந்தாமணி ஓடத்துறை காவிரி பாலத்திலிருந்து கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாச்சிபுரம் வரையும் 2 உயர் மட்ட பாலங்கள் கட்டப்படும் என சட்டப் பேரவை கூட்டத் தொடரின்போது அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
இந்நிலையில், திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையிலிருந்து மரக்கடை வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.2.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம், மேலரண் சாலை, மரக்கடை, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், ரயில்வே ஜங்ஷன் வரை அமைக்கப்பட உள்ள இப்பாலத்தில் நாள்தோறும் சென்றுவரக்கூடிய உத்தேச வாகனங்களின் எண்ணிக்கை, அமைக்கப்பட வேண்டிய தூண்கள் மற்றும் காரிடர்கள் எண்ணிக்கை, முக்கிய சந்திப்புகளில் இணைப்பு சாலைகள், பாலம் கட்டுவதற்கு தேவையான மொத்த நிலம், அதில் கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் அளவு, திட்டப் பணிகளுக்கான செலவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சிந்தாமணியிலிருந்து ரயில்வே ஜங்ஷன் வரை சுமார் 6.5 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. அதில் சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் ஆகிய இடங்களில் 2 சப்-வே அமைக்கப்படுகிறது. முடிந்தவரை தற்போதுள்ள சாலையை ஒட்டியே இந்த உயர்மட்ட பாலம் அமையும். குறைந்த அளவிலான நிலம் மட்டுமே கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பால பணிகளுக்கு ரூ.650 கோடி வரை செலவாக வாய்ப்புள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு, முழுமையான விவரம் தெரியும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago