வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதற்காக 100 செவிலியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் உள்ளதால் விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை தொடங்குவதற்கு முன்பாகவே அதிகளவிலான தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநில அளவில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், மாவட்ட அளவில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சில மாவட்டங்களில் தொய்வு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் வேலூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 8.60 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 6.45 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 2.16 லட்சம் பேரும் போட்டுக் கொண்டுள்ளனர். இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.45 லட்சம் பேரும், 45-60 வயதுக்குள் 2.50 லட்சம் பேரும், 18-44 வயதுக்குள் 4.64 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
அதேபோல், மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளில் இதுவரை செலுத்தப்பட்ட எண்ணிக்கை சதவீதம் 98-ஆக உள்ளது. இது மற்ற மாவட் டங்களில் 100 மற்றும் அதற்கு அதிகமாக உள்ளது.
இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘மாவட்டத்தின் தொலை தூர கிராமங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மக்கள் தவிர்க்கின்றனர். வீடு, வீடாகச் சென்று கேட்டாலும் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை. நகர்புற அளவைக் காட்டிலும் கிராமப்புற அளவில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் உள்ளது. சிலர் காலை நேரத்தில் கூலி வேலைக்குச் செல்வதால் தடுப்பூசி செலுத்த தயங்குகின்றனர்’’ என தெரிவித்தனர்.
ஆனால், வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டிய மக்கள் தொகையில் தற்போது வரை 50% அளவுக்கே எட்டியுள்ளனர். எனவே, மூன்றாம் அலை தொடங்குவதற்கு முன்பாக மேலும் 4 லட்சம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இது மாவட்ட நிர்வாகத்துக்கு சவால் நிறைந்த பணியாக மாறியுள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக வீடு, வீடாக செல்ல தற்காலிகமாக 100 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு, வீடாகச் சென்றாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது. இதனால், மகளிர் குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இதுவரை ஒரு டோஸ் கூட தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago