தூத்துக்குடியில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் - குடிநீர் விநியோகம், போக்குவரத்து நெரிசல் உட்பட தகவல்களைப் பெற வசதி : அனைத்து துறைகள் குறித்த மனுக்களையும் பொதுமக்கள் அளிக்கலாம்

By செய்திப்பிரிவு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக மாடியில் ரூ.10 கோடி செலவில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.

அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்படும் இம்மையம் தொடர்பாக, மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், வர்த்தக சங்கங்களைச் சேர்ந்தவர்கள், தன்னார்வஅமைப்பினருடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா பேசியதாவது:

மாநகராட்சி பகுதியில் செயல்படும் காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை போன்றபல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து இந்த மையம் செயல்படும். மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த மையம் அமையும். மாநகராட்சி பகுதியில் பேருந்துகள் எந்த நேரத்தில் புறப்படும் என்பன போன்ற விவரங்களைக் கூட இந்தமையத்தில் அறிந்து கொள்ளலாம். குடிநீர் விநியோக விவரம், வல்லநாடு நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் தண்ணீர் அளவு, எங்கேயாவது குடிநீர் கசிவு பிரச்சினை இருந்தால் அதன் விவரம் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும். இந்தமையம் 24 மணி நேரமும் செயல்படும். நகரின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இந்தமையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படும். இதனால், காவல் துறையினர் தங்களுக்கு தேவையான தகவல்கள், தரவுகளையும் இந்தமையத்தின் மூலம் பெற்று விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.

உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். மேலும், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் என ஒவ்வொரு பிரிவினரையும் தனியாக அழைத்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

`நகரின் பல பகுதிகளில் வளர்ச்சிப் பணி நடைபெறுகிறது. இதனால் சாலைகள் ஆங்காங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் தெரியாமல் வாகனங்களில் செல்வோர் அந்த பகுதிகள் வழியாக சென்றுவிட்டு திணறுகின்றனர். எனவே, இது தொடர்பான அறிவிப்புகளை வைக்க வேண்டும்’ என, வர்த்தகசங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

`நகரின் எந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது என்ற விவரத்தைக் கூட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இந்த மையத்தில் இருந்து பார்த்துகண்காணிக்க முடியும். பொதுமக்கள் தங்களின் அனைத்து விதமான புகார்களையும், தகவல்களையும், ஆலோசனைகளையும் இந்த மையத்தில் தெரிவிக்கலாம். அவை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்து வைக்கப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்