திருவள்ளூர் மாவட்டத்தில் - நடப்பு சம்பா நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் :

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா நெற்பயிருக்கு, விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகள், பயிர் காப்பீடு செய்வதற்காக, அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க நடப்பு சம்பா பருவம் 2021-22-ல் திருத்திய பிரதம மந்திரிபயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நவம்பர் 15-ம் தேதிக்குள், கடன்பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய தங்களது விருப்பம் அல்லது விருப்பமின்மை கடிதத்தை நவம்பர் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடன் பெறும் விவசாயிகளின் பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓர் ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.31,550 என அரசு நிர்ணயித்துள்ளது. எனவே, ஓர் ஏக்கருக்கு காப்பீடு செய்ய பிரீமியம் தொகையாக ரூ.473 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகம், வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE