சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 10 கிராமங்களில் 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
காளையார்கோவில் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு நீராக உள்ளது. இதனால் இப்பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராம்புளி அருகே பாலப்பணியின் போது குடிநீர் குழாய் சேதமடைந்தது. மூன்று மாதங்களாகியும் சேதமடைந்த குழாயை சீரமைக்கவில்லை.
இதனால் கிராம்புளி, பளுவூர், குண்டாக்குடை, உசிலங்குளம், தோடுகுளம், சோலையூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப் பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இதனால் 10 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். உசிலங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஊருணி தண்ணீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். கிராம்புளி கிராமத்தில் உவர்ப்பு நீரை குடிக்கின்றனர்.
இதுகுறித்து உசிலங்குளம் கிராம மக்கள் கூறியதாவது: காவிரி குடிநீரை முழுமையாக நம்பி இருந்தோம். குழாய் உடைந்துவிட்டதாகக் கூறி 3 மாதங்களாக குடிநீர் விநியோகிக்கவில்லை. சமீபத்தில் பெய்த மழையால் ஊருணியில் தண்ணீர் உள்ளது. அதைத்தான் குடிக்கவும், கால்நடைகளுக்கும் பயன்படுத்து கிறோம். குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து போராட திட்டமிட்டுள்ளோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago