தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி 'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சார்பில் காவலர் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் இம்முகாம் நடைபெற்து.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். முகாமில் ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை மொத்தம் 113 பேர் பங்கேற்று, தங்களது குறைகளை மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர்.
காவலர்களிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்த எஸ்பி, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனு கொடுத்தவர்களுக்கு தனித்தனியாக எழுத்து மூலமாக பதில் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். முகாமில் ஆயுதப்படை டிஎஸ்பி கண்ணபிரான், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago