நெல் கொள்முதலில் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு - பயிற்சிக் கூட்டங்களிலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு :

By செய்திப்பிரிவு

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்வது தொடர்பாக, விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் துணை மேலாளர் முத்தையா தலைமை வகித்தார். வட்டாட்சியர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், துணை மேலாளர் முத்தையா பேசியபோது, “வெளிமாவட்ட வியாபாரிகளின் நெல் தஞ்சாவூர் மாவட்டத்துக்குள் வந்தால், இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான், புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு வந்து காத்திருக்க தேவையில்லை” என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், “வெளி மாவட்ட வியாபாரிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களின் துணையுடன் தான் இங்கு நெல்லை விற்பனை செய்ய கொண்டுவருகின்றனர். இதை முதலில் தடுக்க வேண்டும். முறைகேடுகளுக்கு துணைபோகும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்துக்குள் வருவதற்காக உள்ள 8 வழிகளையும் முறையாக கண்காணித்தாலே போதும். அதை விட்டுவிட்டு ஆன்லைனில் பதிவு செய்வது சாத்தியமில்லாதது” என்றுகூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டத்திலும், முன்னோடி விவசாயி வீரசேனன் தலைமையில் பங்கேற்ற விவசாயிகள், நெல் கொள்முதல் செய்வதில் புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்