வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடித்து 2 மாதங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், பல இடங்களில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாநகராட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் உள்ள குறைகள் தொடர்பாக அடுக்கடுக்கான புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மண்டலம் வாரியாக ஆய்வு செய்யும் பணியை தொடங்கி யுள்ளார். சாட்டையை சுழற்றும் ஆட்சியரின் நடவடிக்கையால் பல இடங்களில் நிலுவையில் இருந்த பணிகள் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நேற்று ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் கால்வாய் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கால்வாய்களை தூர்வாரவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து, செய்தியாளர் களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறும் போது, ‘‘காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் கடந்த 2 மாதங்களில் பெய்த மழையால் தெருக்கள் சேறும், சகதியுமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் பணிகளை ஆய்வு செய்ய வந்தேன்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை துரிதப்படுத்தவும் இரவு, பகலாக சுழற்சிமுறையில் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. பணிகள் முடிந் ததும் 2 மாதங்களில் அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்படும்’’ என்றார்.
இந்த ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் மணி வண்ணன், முதலாவது மண்டல உதவி ஆணையர் செந்தில், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago