தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு? : திருவள்ளூரில் உறவினர்கள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள புதூர் மேடு பகுதியைசேர்ந்தவர் நந்தகுமார் மனைவி லாவண்யா (25). 9 மாத கர்ப்பிணியாக இருந்த லாவண்யா நேற்று முன்தினம் புதூர் கிராமத்தில் நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவருக்கு, அன்று நள்ளிரவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பட்டரைபெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒரு ஊசி மருந்தை செலுத்தியுள்ளார். பின்னர், நேற்று அதிகாலை 2 மணியளவில் லாவண்யாவுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லாவண்யாவுக்கு, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வாயில் நுரை வந்தது.

தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லாவண்யா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், கோபமடைந்த லாவண்யாவின் உறவினர்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட லாவண்யா, ஆரம்பசுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விசாரணைக்கு உத்தரவு

இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரகாசன் ஆகியோர், லாவண்யா உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதியளித்தனர். ஆகவே, போராட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து, லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்