கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயினால் கண் விழித்திரை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு சிறப்பு லேசர் அறுவை சிகிச்சை மூலம் , விழித்திரை மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் லேசர் சிகிச்சையை மருத்துவக் கல்லூரியின் கண்பார்வை இழப்பு மற்றும் தடுப்பு திட்ட மேலாளர் மருத்துவர் கிருபாவதி, கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வனிதா, சத்யா, ஷகிலா, நித்யா ஆகியோர் கொண்ட குழு செய்தது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அசோகன் கூறியதாவது:

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், கண் விழித்திரை பாதிப்புக்கான லேசர் அறுவை கிசிச்சை, கண் தசை வளர்ச்சி தடுப்பு சிகிச்சை, கண் நீர் அழுத்த நோய்க்கான சிகிச்சை, விபத்துகளால் ஏற்படும் கண் தொடர்பான நோய்களுக்கும் மற்றும் புரைக்குரிய நவீன அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு கண் தொடர்பான சிகிச்சைகள் தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே நடத்தப்படுகிறது.

இந்த நோய்க்கான அறுவை சிகிச்சைகள் வெளியில் செய்து கொள்ள ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். முற்றிலும் இலவசமாக செய்யப்படும் இக்கண் நோய் அறுவை சிகிச்சைகளை கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது, மருத்துவ கண்காணிப்பாளர் (பொ) மருத்துவர் தரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜா, மருத்துவர்கள் ராஜலட்சுமி, மது உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்