கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து, தமிழக முதல்வரால் நடப்பு ஆண்டு விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுவதையும் விவசாயிகள் அறியும் வகையில் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்களின் கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நிகழாண்டில் சாகுபடி செய் துள்ள பயிர்களுக்கு ஏற்ப உரிய திட்டத்தின் மூலம் பலன்களைப் பெற்று விவசாயிகள் பயனடைய வேண்டும். தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு கருத்தலை புழு பிரச்சினைக்கு தீர்வாக ஒட்டுண்ணி விடுதல் மற்றும் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்தல் முதலிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கான உதவிகளை விவசாயிகளுக்கு செய்திட வேண்டும். உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதைகள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். விற்பனையாளர்களிடம் விவசாயிகள் ஏமாறாத வண்ணம் தனியார் வேளாண் இடுபொருள் விற்பனை மையத்தை ஆய்வு செய்து, அதன் விவரத்தை அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஆணைப்படி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை வட்டார உதவி வேளாண்மை இயக்குநர்கள் பெற்று, உரிய துறையை அணுகி தீர்வு காண வேண்டும். குறைகள் தீர்த்திட எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE