திருச்சி விமானநிலையத்தில் புதுகை சாலையையொட்டி - 420 மீ நீளத்துக்கு விமான ஓடுதள புதிய அணுகு மின்னொளி : இனி கூடுதல் பாதுகாப்புடன் விமானங்களை தரையிறக்கி, ஏற்றலாம்

By அ.வேலுச்சாமி

திருச்சி விமானநிலையத்தில் புதுகை சாலையையொட்டி கையகப்படுத்தப்பட்ட 6 ஏக்கரில் 420 மீ தூரத்துக்கு விமான ஓடுதள புதிய அணுகு மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவல் காரணமாக விமானங்கள் இயக்க நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், திருச்சி விமானநிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், சார்ஜா, கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு வெளிநாட்டு விமான சேவைகளும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரக்கூடிய பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப விமான சேவைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதுஒருபுறமிருக்க, விமானநிலையத்தில் தற்போதுள்ள 2,424 மீட்டர் நீள ஓடுதளத்தில் நத்தமாடிப்பட்டி பகுதியிலிருந்து (ஓடுதளம் எண்: 27) ஏபி-321/320, போயிங்-737 உள்ளிட்ட ரக விமானங்களை ஏற்றி, இறக்குவதற்கான பாதுகாப்புடன்கூடிய கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளன. அதேசமயம் புதுக்கோட்டை சாலை பகுதியிலிருந்து (ஓடுதளம் எண்: 9) விமானங்களை இறக்கி, ஏற்றுவதற்கு அணுகு மின்னொளி வசதி (Approach lighting system) போதுமானதாக இல்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டிஜிசிஏயின் (டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன்) தணிக்கையின்போது, பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அறிக்கை அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் விமானநிலைய சுற்றுச்சுவர் அருகே ஓடுதளத்துக்கு நேர்திசையில் புதுக்கோட்டை சாலையை ஒட்டி இருந்த சுமார் 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன்பின், அங்கு வானில் பறக்கும்போது விமானிகளுக்கு ஓடுதளம் (எண்:9) துல்லியமாக தெரியும் வகையில் அணுகு சமிஞ்ஞை மின்னொளி விளக்குகளை பொருத்தும் பணிகள் ரூ.61.74 லட்சம் செலவில், 420 மீ நீளத்துக்கு (தலா 60 மீ தூரத்துக்கு ஒன்றாக 30 மீ குறுக்கில் இரு புறமும்) மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் செயல்பாடுகள் கடந்த 16-ம் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, சிறப்பாக இயங்கியது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது இந்த புதிய அணுகு மின்னொளி செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘நத்தமாடிப்பட்டி பகுதியிலிருந்து விமானங்களை இறக்கி, ஏற்றுவது மிகுந்த பாதுகாப்பானதாக உள்ளது போலவே, புதுக்கோட்டை சாலையை ஒட்டிய ஓடுதள பகுதியிலும் இருக்கும் வகையில், தற்போது புதிதாக 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனி இந்த பகுதியிலிருந்தும் விமானங்களை பத்திரமாக தரையிறக்கி, ஏற்ற முடியும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்