பாவூர்சத்திரம் - ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரம் மாற்றம் :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், 11.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. இதனால், காலை 8 மணிக்கு புதிய தேதியில் ஆரம்பிக்கப்படும் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாமலும், காலை 11 மணிக்கு செய்யப்படும் குளிர்சாதன வசதி அல்லாத தூங்கும் வசதி மற்றும் இருக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு தட்கல் முன்பதிவு செய்ய முடியாமலும் பயணிகள் அவதிப்பட்டனர்.

முன்பதிவு ஆரம்பித்து அரை மணி நேரத்தில் முடிந்து விடுவதால், அனைத்து ரயில்களின் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு செல்வதால் பயணச்சீட்டு முன்பதிவு செய்து பாவூர்சத்திரத்திலிருந்து பயணம் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் நேரங்களில் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். அதற்கு பதிலளித்த மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள், காலை 8.30 முதல் மதியம் 12.30 வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் இயங்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்