திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை, திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் கணபதி நகர் பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாறைக்குழிக்கு செல்லும் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்டது அம்மாபாளையம். இங்கு 11-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகர், கானக்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து, கணபதி நகர் பாறைக்குழியில் கொட்டுவது வழக்கம். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாநகராட்சி குப்பை வாகனம் பாறைக்குழிக்கு செல்ல முடியாதவாறு, கணபதிநகர் செல்லும் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது ‘‘குப்பை கொட்டும் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், போராட்டத்துக்கு திருமுருகன்பூண்டி போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பாறைக்குழிக்கு செல்லும் சாலையில் காத்திருந்தோம்.அங்கு வந்த அவிநாசி வருவாய்த் துறையினர் மற்றும் திருமுருகன்பூண்டி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதற்கு மேலும் காத்திருந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்ததால், இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.
இதுகுறித்து அவிநாசி வட்டாட்சியர் ராகவி கூறும்போது ‘‘கணபதிநகர் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தரப்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 24-ம் தேதி திருப்பூர் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. தொடர்புடைய பாறைக்குழி உரிமையாளரிடம், உரிய அனுமதி பெற்ற பிறகே குப்பை கொட்டப்பட்டு வருகிறது,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago