வீரராகவ பெருமாள் கோயில் சார்பில் - தனியார் பள்ளி நிர்வாகம் மீது திருவள்ளூர் ஆட்சியரிடம் புகார் :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளம் அருகே உள்ள, கோயிலுக்குச் சொந்தமான 1.50 சென்ட் நிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு முதல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி, தரை வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், அமாவாசை தினத்தின்போது கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் அந்த இடம் தேவை என்பதால், சம்பந்தப்பட்ட இடத்தை ஒப்படைக்க வேண்டும் என, கடந்த 2017-ம் ஆண்டு கோயில் நிர்வாகம், பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.

அதன்படி, திருவள்ளூர் முகமது அலி தெருவில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பள்ளிக் கட்டிடம் கட்ட கோயில் நிர்வாகம் அனுமதி அளித்து, ஓர் ஆண்டு கால அவகாசமும் கொடுத்தது. ஆனால், அந்த இடத்தில் பள்ளி நிர்வாகம் புதிய கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதன் பிறகு, கோயில் தெப்பக்குளம் அருகே உள்ள நிலத்தில் தொடர்ந்து பள்ளி செயல்படக் கூடாது என்பதற்காக கோயில் நிர்வாகம் தரை வாடகை ஒப்பந்தம் போடவில்லை. அதுமட்டுமல்லாமல், பள்ளிக்கல்வித் துறையின் தொடர் அங்கீகாரமும் இல்லாமல் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இப்பள்ளி செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக ஆட்சியரிடம் கோயில் நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ``கோயில் நிலத்தில், பள்ளிக்கல்வித் துறையின் தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் பள்ளியில் சேரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, அப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருக்கவும், 2017-ம் ஆண்டு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, சம்பந்தப்பட்ட இடத்தை பள்ளி நிர்வாகம், கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்