கர்நாடகாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூருவிலிருந்து திருச்சிக்கு மினி வேனில் கஞ்சா கடத்தி வருவதாக மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக கர்நாடகாவிலிருந்து வந்த ஒரு மினி வேனில் சோதனையிட்டபோது, முட்டைக்கோஸ் மூட்டைகளுக்குள் மறைத்து 98 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார், வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடகா மாநிலம் மைசூர் நியூ பம்ப் பஜார் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் சோமுசேகர் (22), மைசூர் உதயகிரி முனீஸ்வர நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் மனோஜ்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உடனடியாக அங்குசென்று பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களைப் பார்வையிட்டார்.
கைது செய்யப்பட்ட 2 பேரிடம் சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை மைசூரிலிருந்து திருச்சி கம்பரசம்பேட்டை கணபதி நகரைச் சேர்ந்த பாஸ்கர் (50), அவரது சகோதரர் முத்து (60) ஆகியோருக்காக இவற்றை கடத்தி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாரை காவல் ஆணையர் க.கார்த்திகேயன் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago