முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்தோருக்கு - உள்ளாட்சித் தேர்தல் முடிந்த 15 நாட்களில் ஆணை வழங்கப்படும் : அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளித்துள்ளவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிந்த 15 நாட்களில் ஆணை வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ஏ.கண்ணையன் போட்டியிடுகிறார். இதையொட்டி, வெள்ளியணையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தேர்தல் பணிமனையை திறந்து வைத்துப் பேசியது: திமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்துக்கு ரூ.2,000 கோடியில் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 கதவணை மற்றும் 19 தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த மாவட்ட ஊராட்சி வார்டு பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.10.71 கோடியில் செயல்படுத்தப்படுகின்றன.

வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். இடம் இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும். முதியோர் உதவித்தொகைக்கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிந்த 15 நாட்களில் அதற்கான ஆணை வழங்கப்படும். இப்பகுதியில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி, மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், தாந்தோணி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் எம்.ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், வெள்ளியணையில் பகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE