கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் - மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது :

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு விடுத்தது. தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப், ஹெச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்பினர், விவசாய சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட 475 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து பங்கேற்றனர். கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் என்.சேகர் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 285 பேரை போலீஸார் கைது செய்தனர். அதே பகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, பல்லகவுண்டன்பாளையம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல அவிநாசி, பல்லடம், காங்கயம், உடுமலை ஆகிய இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், தேவர்சோலை, மஞ்சூர், பந்தலூர், எருமாடு, கோத்தகிரி என மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 370-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்