தமிழகத்திலேயே முதன்முறையாக ‘ கியூ ஆர் கோடு ’ ஸ்கேன் மூலம் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் திட்டம் மதுரையில் தொடங்கப்பட்டது.
சாலைகளில் விதிமீறும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸார் ரசீது வழங்கி அபராதம் வசூலிப்பது வழக்கம். இதில் சில தவறுகள் நடக்க வாய்ப்பு இருந்ததால் இம்முறை மாற்றப்பட்டு ஆன்லைன் (டிஜிட்டல்) மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மற்றும் இ- சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மூலம் அபராதம் செலுத்த வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில் முதல்முறையாக ‘ கியூ ஆர் கோடு’ (QR Code) ஸ்கேன் முறையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை கார்டுகள் மூலம் செலுத்தும் நடைமுறையை கடந்த வாரம் மதுரை மாநகர் போக்குவரத்து பிரிவு தொடங்கி உள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் எந்த ஒரு பகுதியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை கியூ ஆர் கோட் (G- Pay, Phonepay, Paytm) மூலம் செலுத்தலாம் என அப்பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து உதவி ஆணையர் மாரியப்பன் கூறுகையில், ‘‘ இந்த புதிய திட்டத்தால் கால விரயம் மிச்சமாகிறது. ஏற்கெனவே அபராதத் தொகையை செலுத்தாமல் இருந்தாலும் அதை செலுத்தலாம். கரோனா பேரிடர் காலத்தில் கார்டு பண பரிவர்த்தனையால் நோய் பரவலும் கட்டுப்படும்." என்றார்.
இது தொடர்பாக விழிப்புணர்வு பதாகைகளும் மாநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட போலீஸார் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, பொதுமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago