சிவகங்கை அருகே பாதை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கண் மாய்க்குள் நடந்து செல்கின்றனர்.
காளையார்கோவில் ஒன்றியம் சிரமம் ஊராட்சி ஆலங்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு அருகேயுள்ள சேம்பார் கிராமத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் மாணவர்களும் சேம்பார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஆலங்குடிக்கும், சேம் பாருக்கும் இடையே ஒன்றரை கி.மீ. தூரமே இருந்தாலும் இடையில் கண்மாய் உள்ளதால் பாதை இல்லாத நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் கண்மாய்க்குள் நடந்து சென்று வருகின்றனர். மழைக் காலங்களில் கண்மாய் நிரம்பி விடுவதால், தண்ணீரில் இறங்கி செல்லும் நிலை உள்ளது.
பாதை வசதி கேட்டு 40 ஆண்டுகளாக ஆலங்குடி கிராம மக்கள் போராடி வந்த நிலையில், 2015-ம் ஆண்டு அப்போதைய சிவகங்கை ஆட்சியர் முனுசாமி கண்மாய்க்குள் பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், அப்பணி பாதியில் கைவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கண்மாயில் கணிசமான அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கிராம மக்கள் தண்ணீருக்குள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். பாதியில் கைவிடப்பட்ட பாலக் கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்கி பாதை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆலங்குடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒப்பந்ததாரர் பிரச்சினையால் பாலப் பணி முடிவடையாமல் உள்ளது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago